பிரசாந்த்
(Prashanth, பிறப்பு: ஏப்ரல் 6, 1973)
தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர்.
இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
அஜித், விஜய்க்கு டஃப் கொடுத்த டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் இன்று🌹
இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமாவது இந்தியா முழுவதும் நடைபெறும் ஒன்றுதான். அந்த அடையாளம் சினிமாவுக்கான கதவை எளிதாக திறந்து வைக்கும். ஆனால் திறமை என்ற ஒன்று இல்லையென்றால் ஒன்றிரண்டு படங்களோடு ஒருவரை வெளியே தள்ளி கதவை மூடிக்கொள்ளும். அப்படி சினிமா வெளியே தள்ளிய இயக்குநர்களின் மகன்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் திறமையால் சினிமாவுக்குள்ளே இருந்து வென்றவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். அந்த சிலரிக் பிரசாந்த்தும் ஒருவர்.
கோலிவுட்டில் டாப் ஹீரோக்களாக இருப்பவர்கள் அஜித்தும், விஜய்யும். தொடர்ச்சியாக அவர்கள் இப்போது சூப்பர் ஹிட்டாகவோ இல்லை சுமார் ஹிட் படங்களையோ கொடுத்துவருகிறார்கள். ஆனால் இருவரின் முதல் சில படங்கள் படுதோல்வியை சந்தித்தவை. அதேசமயம் பிரசாந்த்துக்கு அப்படி இல்லை. முதல் படமான வைகாசி பொறந்தாச்சும், அடுத்த படமான செம்பருத்தியும் வெள்ளி விழா கண்டவை. இந்த பெருமை பிரசாந்த்தை தவிர தற்போதைய தலைமுறை ஹீரோக்களில் யாருக்குமே இல்லை.
தமிழ் சினிமாவின் பாதையை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலுமகேந்திரா. அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று சீனியர் நடிகர்களே விரும்புவார்கள். ஆனால் பாலுமகேந்திரா பட்டறைக்குள் செல்வதற்கு அவரது கண்ணில் ஒருவர் திறமை வாய்ந்தவராக பட வேண்டும். அப்போதுதான் அந்த பட்டறையின் கதவு திறக்கும். அந்தக் கதவு பிரசாந்த்துக்கு சில படங்களிலேயே திறந்தது. பாலுமகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த் நடித்த வண்ண வண்ண பூக்கள் மெகா ஹிட் இல்லையென்றாலும் கதை ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றது. 'யாருப்பா இது சினிமாவுக்குள் வந்த சில வருடங்களிலேயே பாலுமகேந்திரா படத்தில் நடித்த இளம் ஹீரோ' என பிரசாந்த்தை ஆச்சரியமாகவே பலரும் பார்த்தார்கள்.
சினிமாவின் வளர்ச்சி இப்போது அபரிமிதமாக இருக்கிறது. பலர் புது புது கதைக்களங்களோடு உள்ளே வருகிறார்கள். கோலிவுட்டிலிருந்து பயணப்பட்டு ஹாலிவுட்வரை செல்கிறார்கள். அது சாதாரணம் இல்லை. இப்போதே இந்த நிலைமை என்றால் 90களை நினைத்து பாருங்கள். எந்த ஹீரோவும் தான் அறிமுகமான இரண்டே வருடங்களில் ஹிந்திக்கு சென்று நடித்தது கிடையாது. பிரசாந்த் அதையும் செய்தார். 1992ல் வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன் என தமிழ் படங்களில் பிஸியாக இருந்தவர் ஹிந்தியில் ஐ லவ் யூ படத்தில் நடித்தார். படம் சுமார்தான் என்றாலும் சினிமாவில் அறிமுகமாகி இரண்டே வருடங்களில் ஹிந்திவரை சென்றது பிரசாந்த்தின் சாதனைதான்
பிரசாந்த்துக்குள் இருக்கும் திறமையை உணர்ந்த மணிரத்னம் தனது படத்தில் ஹீரோவாக கமிட் செய்தார். திருடா திருடா படம் வெளியானபோது மணிரத்னத்தின் மேக்கிங்கும், அதற்கு பிரசாந்த் போட்ட உழைப்பும் பெரிதும் பேசப்பட்டது. மணியின் படத்தில் நடித்துவிட்டதை அடுத்து இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என பிரசாந்த் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் சுதாரித்துக்கொண்ட அவர் பாலிவுட் கனவுகளை ஒதுக்கிவைத்த அவர் கோலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
90களின் மத்தியில் திரைத்துறைக்கு அறிமுகமான இயக்குநர்கள் கையில் கதை வைத்திருந்தால் அதில் பிரசாந்த் நடிக்க வேண்டும் என்றே நினைத்தனர். அந்த அளவு அவர் தொடர்ச்சியாக ஹிட்டுகளை கொடுத்தார். அப்படிப்பட்ட சூழலில் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, உலக அழகி ஐஸ்வர்யா ராய் கதாநாயகி, அசோக அமிர்தராஜ் தயாரிப்பு என அறிவிப்பிலேயே பிரமாண்டங்களை சுமந்து வந்த படம் அது. இரட்டை வேடத்தில் பிரசாந்த் அதில் செய்திருக்கும் நடிப்பு அதகளமானது. இல்லாத காதலியை இருப்பதாக நம்பிக்கொண்டு அந்தக் காதலிக்காக பிரசாந்த் செய்யும் விஷயங்களை இப்போது பார்த்தாலும் அய்யோ பாவம் என்றே தோன்றும். அப்படி தோன்றுவதற்கு பிரசாந்த்தின் நடிப்பு மட்டுமின்றி அவரது வெகுளித்தனமான முகமும் காரணம்
பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் ஆகிய மூவரும் இந்திய சினிமாவின் அடையாளங்கள். இவர்கள் மூன்று பேரின் படங்களில் நடித்தால் தங்களது கிராஃப் எங்கோ சென்றுவிடுமே என பலர் ஏங்கிக்கொண்டிருந்த சூழலில் 1990ஆம் ஆண்டு அறிமுகமாகி 1998ஆம் ஆண்டுக்குள் மூன்று பேரின் இயக்கத்திலும் நடித்துவிட்டார் பிரசாந்த். இந்த மூன்று பேரின் இயக்கத்திலும் கமல் ஹாசன், ரஜினிகாந்த் தவிர்த்து நடித்தது பிரசாந்த் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.
டான்ஸ் வேண்டுமா டான்ஸ் இருக்கு; ஃபைட் வேண்டுமா ஃபைட் இருக்கு; பெர்பார்மன்ஸ் வேண்டுமா பெர்பார்மன்ஸ் இருக்கு என பிரசாந்த் முழுமையான நடிகர். தனது இயல்பான நடிப்பின் மூலம் அப்ளாஸை அள்ளும் பிரசாந்த்தின் எக்ஸ்பிரெஷன்ஸும் அவ்வளவு க்யூட்டாக இருக்கும். அவர் நடனம் ஆடும் எந்த பாடலை பார்த்தாலும் அவரது முகத்தில் அப்படியொரு பாவனைகள் தனித்தன்மையோடு ஓடிக்கொண்டிருக்கும். பிரசாந்த்தின் முகம் ஆக்ஷன், ஆக்சிங், டான்ஸ், இன்னொசண்ட் என அத்தனைக்கும் பொருந்திப்போகக்கூடியது அல்லது பொருத்திக்கொள்ளக்கூடியவர் பிரசாந்த்.
விஜய் - அஜித் என்ற ரேஸ் இப்போது கோலிவுட்டில் இருக்கிறது. 90களில் தான் இருந்த ஃபார்மை பிரசாந்த் தொடர்ந்திருந்தால் இன்று பிரசாந்த் - விஜய் அல்லது பிரசாந்த் - அஜித் என்றுதான் நிலைத்திருக்கும். ஏனெனில் பிரசாந்த்துக்கு ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் ரசிகர்களாக இருந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவரது கதை தேர்வுகள்தான். குடும்பங்கள் கொண்டாடும் ஜனரஞ்சகமான கதைகளில் நடித்து மிகச்சிறப்பாகவே தனது கிராஃபை கொண்டு சென்றார். ஆனால் 2000 ஆரம்பத்திலும் அதற்கு பிறகும் அவர் சறுக்கிய இடம் என்பது கதைகளை தேர்வு செய்ததில்.
ஒருபக்கம் அஜித் அமர்க்களம், வாலி, வில்லன், தீனா என பல ஜானர்களில் செல்ல; மறுபக்கம் விஜய்யும் துள்ளாத மனமும் துள்ளும், குஷி, திருமலை என வெவ்வேறு ஜானர்களில் பயணப்பட பிரசாந்த் சாக்லேட் பாய், குடும்பங்கள் கொண்டாடும் படங்களின் ஹீரோ என்ற வட்டத்துள்ளேயே சிக்கிக்கொண்டார். காலம் தாழ்ந்து அதை உணர்ந்துகொண்டு ஆக்ஷன் கதைகளை தேர்வு செய்து பிரசாந்த் நடிப்பதற்குள் அஜித்தும், விஜய்யும் நீண்ட தூரம் சென்றிருந்தார்கள்.
அப்படி இருந்தும் ஆக்ஷன் கதைகளில் நடித்தாலும் அவர் மீது விழுந்த சாக்லேட் பாய் இமேஜை உடைக்கும் அளவுக்கு ஆக்ஷன் படங்கள் அவருக்கு அமையவில்லை. அதுமட்டுமின்றி அப்பு நல்ல ஆக்ஷன் படம்தான் ஆனால் அதில் பிரகாஷ் ராஜ் ஸ்கோர் செய்திருப்பார். அதேபோல் வின்னரும் நல்ல கமர்ஷியல் படம்தான் ஆனால் அதில் வடிவேலு ஸ்கோர் செய்திருப்பார்.
சினிமாவில் விழுவது இயல்புதான்.
ஆனால் எழுந்துவிட வேண்டும். எழும்போது யாரை துணைக்கு வைத்துக்கொள்கிறோம் என்பது சினிமாவில் முக்கியம். அப்படி தன்னுடைய துணையை அவர் கனகச்சிதமாக தேர்வு செய்ய வேண்டும். ரீமேக் கலாசாரம் பெருகியிருக்கிறது. அதனால்தான் அந்தாதூன் படத்தை பிரசாந்த் ரீமேக் செய்து அந்தகன் படத்தில் நடித்துள்ளார் .