சென்னை
சமூகத்தில் மட்டுமன்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில், 'தற்போதைய பதிவுகளில் 75 சதவீதம் மகளிர் இந்த சலுகையை பெற தகுதியை பெறுவார்கள். இந்த சலுகையின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை, நிதி சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என அரசு உறுதியாக நம்புகிறது' என கூறப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து அனைத்து பத்திரப்பதிவு அலுவலர்களும், இந்த அரசாணைப்படி செயல்பட பத்திர பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.இதன்மூலம் பத்திர பதிவு மேற்கொள்ளும் மகளிருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து ஓய்வுபெற்ற பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதிவு கட்டணமாக 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் அதிகபட்சம் ரூ.10 லட்சத்துக்கு ரூ.20 ஆயிரம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் போதும். இதன்மூலம் ரூ.10 ஆயிரம் மிச்சமாகும்.ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு மட்டுமே இந்த பதிவு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை பதிவு செய்யும் மகளிர் இந்த சலுகையை பெற முடியாது.தற்போது கிராமப்புறங்களில் கூட நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் வெறும் ரூ.10 லட்சத்துக்கு சொத்துகள் வாங்க முடியாது.எனவே, ரூ.10 லட்சத்துக்கு அதிகமான சொத்துகளை பதிவு செய்யும் மகளிரும் இந்த சலுகையை பெறும் வகையில் இந்த திட்டத்தை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.தான செட்டில்மென்ட் பதிவை பொறுத்தமட்டில் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தான செட்டில்மென்டை பொறுத்தமட்டில் அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.40 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட சொத்தின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியாக இருந்தாலும் பதிவு கட்டணமாக ரூ.40 ஆயிரம் செலுத்தினால் போதும்.அதிக மதிப்புள்ள சொத்துகளை கொண்ட பெரும் செல்வந்தர்களுக்கு சலுகை அளிக்கும்போது மகளிருக்கு சலுகை அளிப்பதில் உச்சவரம்பை நிர்ணயித்து இருப்பது சரியானது அல்ல.உச்சவரம்பை நீக்கி விட்டு எவ்வளவு மதிப்பிலான சொத்துகள் என்றாலும் பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் கட்டணம் அளிக்கும்போதுதான் அனைத்து தரப்பு மகளிரும் பயன்பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.