தனியார் பள்ளியில் இலவச சேர்க்கை.

123
By -
0

தனியார் பள்ளிகளில் 25% இலவச மாணவர் சேர்க்கை - விண்ணப்ப பதிவு வரும் வாரம் தொடக்கம்!

தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு வரும் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTE - Right to Education) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.

தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே வரும் கல்வியாண்டு்க்கான (2025-26) இலவச சேர்க்கைக்கு இணைதள விண்ணப்பப் பதிவு ஏப். 3-வது வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஆர்டிஇ திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறமுடியும். இந்த திட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் உள்ளிட்டோர் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

நலிந்த பிரிவினர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியமாகும். எனவே, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து விண்ணப்பப் பதிவுக்கான அறிவிப்பாணை வெளியானதும் பெற்றோர் https://rte.tnschools.gov.in எனும் வலைத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)