பிரபல வானோலி தொகுப்பாளர் பி.எச். அப்துல் ஹமீது இன்று தனது 76 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, என்ன எங்கேயோ கேட்டது போல இருக்கிறதா? ஆம், முன்னொரு காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் இந்த சத்தம் கேட்காத வீடுகளே இருக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி அடையக் காரணம் இதன் தொகுப்பாளர் பி.எச் அப்துல் ஹமீது தான்..
தெளிவான தமிழ் மொழி வார்த்தைகளால், கணீர் குரலோடு தொகுத்து வழங்கியவர் அப்துல் ஹமீது. இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். தனது வாழ்க்கையை கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தில் வர்த்தக ஒளிபரப்பு அறிவிப்பாளராகத் தொடங்கியுள்ளார்.
குரல் வளமும் இவரைத் தமிழ்நாட்டிற்கு வர வைத்தது. அப்போது உச்சத்தில் இருந்த அனைத்து சேனல்களிலும் வளம் வந்த தொகுப்பாளர் இவர்.
இவருடைய அழகிய தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் இவரை அழைத்தன. ஏராளமான மேடை நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளார். அப்போது முக்கிய பிரபலங்களைப் பேட்டி எடுக்கும் முன்னணி தொகுப்பாளராக இவர் இருந்து வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதற்குப் பிறகுக் கலை நிகழ்ச்சிகளிலிருந்து விலகி தற்போது உலக நாடுகள் பயணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அந்த காலத்தில் பெரிய தொழில் நுட்ப சாதனங்கள் எல்லாம் கிடையாது. மக்களுக்கு வானொலி பெட்டி தான் மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனம். செய்திகள், பாடல்கள், திரைவிமர்சனங்கள் உள்ளிட்டவற்றை வானொலி மூலம் தான் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
அப்போதே தனது பெயரை பொதுமக்கள் மத்தியில் பதித்தவர் அப்துல் ஹமீது. வானொலி பெட்டியுடன் வாழ்ந்தவர்களிடம் கேட்டால், வானொலியில் அப்துல் ஹமீது முடிக்கும் வசனங்களோடு சேர்த்து அவரது பெயரைத் தெளிவாகக் கூறுவார்கள்.
வானொலி மூலம் நாடகங்கள் நடத்தியவர் இவர். பாட்டுக்குப் பாட்டு போட்டியை முதலில் வானொலியில் நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். 90களில் பிறந்த அனைத்து இளைஞர்களுக்கும் இவரைக் கட்டாயம் தெரியும்.
சிறந்த குரல் வளம் கொண்ட இவர், பாடலாசிரியர், தொகுப்பாளர், மேடை நாடகம், எழுத்தாளர், பாடலாசிரியர் என பல்வேறு துறைகளில் திறமைகளைக் கொண்டவராக இன்றுவரை பலருக்கும் முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறார்
இவர் நடத்திய பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும், அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பலர் திரைத்துறையில் மிகப்பெரிய பாடகர்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மொழியில் தொகுத்து வழங்குகிறோம் என்றால், அதன் அடித்தளத்தை செம்மையாக கற்று உணர்ந்து வேறு மொழிக் கலப்பில்லாமல் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும். அனைத்து மொழிகளையும் கலந்து தமிழ் மொழியை உச்சரிப்பது தொடர்ந்தால் வரும் காலங்களில் அதுவே நிலை ஆகிவிடும் என்பது இவருடைய மிகப்பெரிய ஆதங்கமாக இருந்து வருகிறது.
தொகுப்பாளராகத் தனது வாழ்க்கையைல் தொடங்கிய இவர், உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் அன்பிற்குரியவராக இன்றும் இருந்து வருகிறார். இன்று தனது 76 வது பிறந்தநாளை கொண்டாடும் காந்த குரலழகன் அப்துல் ஹமீதுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
கருத்துரையிடுக
0கருத்துகள்