ரூ.5,24,00,00,000 ஊழல்: செல்வப்பெருந்தகைக்கு தொடர்பா? - அண்ணாமலை கேள்வி
'தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர் ஆக்குகிறோம் பெயரில் என்ற பெயரில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருக்கிற ஊழலுக்கு, தி.மு.க.. அரசும் உடந்தையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது' என, தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: துாய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதாக அறிவித்து, அவர்கள் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் வாயிலாக, அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்துக்கொள்ள, 524 கோடி ரூபாய் மதிப்பில், அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருப்பதாக, தி.மு.க., அரசு அறிவித்திருக்கிறது.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், 54 பயனாளிகளுக்கும், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில், 33 பயனாளிகளுக்கும்,நவீன கழிவு அகற்றும் வாகனம் வாங்கக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறிப்பாக, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், கடந்த 2024, ஆக., 12 மற்றும் 19ம் தேதிகளின் இடையே, ஒரே வாரத்தில், 65 லட்சம் ரூபாய் வீதம், 54 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய வங்கிக் கணக்கு துவங்கி, 'செக்' புத்தகம் வழங்கிய அதே தினத்தில், கணக்கில், 65 'லட்சம் ரூபாய் வரவு வைத்து, பின்னர் இரண்டு, 'செக்'குகளில் கையொப்பம் வாங்கி விட்டு, பயனாளிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடன் வழங்கி, 7 மாதங்கள் ஆகிவிட்டன. கடன் தொகையில், ஒரு ரூபாய் கூடத் திருப்பிச் செலுத்தப்படவில்லை. கடன் பெற்ற தினத்திற்குப் பின், அந்தக் கணக்கில் எந்தவித பணப் பரிமாற்றங்களும் இதுவரை நடக்கவில்லை.
கூட்டுறவு வங்கிகள், எந்தவிதப் பிணையும் இல்லாமல், இத்தனை பேருக்குத் தலா, 65 லட்சம் ரூபாய் எந்த அடிப்படையில் வழங்கின?
உண்மையில் கடன் பெற்றவர்கள், துாய்மைப் பணியாளர்கள் தானா என்ற சந்தேகம் இருக்கிறது.
மத்திய அரசின் அரதன் வாயிலாக கடன் பெற்றிருந்தால், உண்மையான பயனாளிகள்தானா என்பதை சரிபார்த்திருப்பர். அதை தவிர்க்கவே, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
கடந்த 2023ம் ஆண்டு, ஜூன் 7 அன்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்ட தனியார் நிறுவனத்துக்கும், வங்கிக் கடன் பெற்ற பயனாளிகளுக்கும் இடையே, 2023ம் ஆண்டே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, தமிழக அரசோடு தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள, 524 கோடி ரூபாய்க்கான கழிவுநீர் அகற்றும் பணிகளை, அவர்களுக்குப் பதிலாக, தனியார் நிறுவனமே மேற்கொள்ளும் என, கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வீரமணி ராதாகிருஷ்ணன், செல்வப்பெருந்தகையின் சொந்த அண்ணன் மகன். இந்த நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி, செல்வப்பெருந்தகை யின் அலுவலக முகவரி.
துாய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வுக்கும், அவர்கள் முன்னேற்றத்திற்கும் கொண்டுவரப்பட்ட திட்டம், செல்வப்பெருந்தகையின் பினாமி நிறுவனத்திற்கு வாகனங்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது, தி.மு.க., அரசுக்கு தெரியாமலா நடந்திருக்கும்?
ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து, அவர்களுக்கான திட்டங் களை தங்கள் நலனுக்காக மடைமாற்றியிருப்பதை, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
0 Response to "ரூ.5,24,00,00,000 ஊழல்: செல்வப்பெருந்தகைக்கு தொடர்பா? - அண்ணாமலை கேள்வி"
إرسال تعليق