வாய்ப்புண்


வாய்ப்புண் வருவது ஏன்?

நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாக உள்ளவர்களை, இது அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, வைட்டமின் பி12, இரும்புச் சத்து மற்றும் போலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகிறது. ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுகிறது. பிரசவ காலங்களிலும், இறுதி மாதவிடாயின் போதும், ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், பெண்களுக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறது. 

மருந்து மாத்திரைகள் அதிகம் உண்பவர்களுக்கு வாய்ப்புண் வரும். முரட்டுத்தனமாக பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷை கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும், மெல்லியக் காயங்கள் மூலமும், வாய்ப்புண் ஏற்படும்.

வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள், வயிற்றுப்புண் (அல்சர்) காரணமாகவும்  வாய்ப்புண் உருவாகும். அதிகம் உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வாய்ப்புண் வரக்காரணமாகிறது. மேலும், முட்டை, காபி, சீஸ், ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுதல், சில தரம் குறைந்த பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் வரும்.

வாய்ப்புண் போக்க இயற்கை வழிகள்...!!

வாய்ப்புண் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் சில உணவுப் பொருட்களைக் கொண்டே இயற்கையான வழியில் நிவாரணம் காணலாம்.  

1. தேங்காய்

வாய்ப்புண் உள்ளவர்கள் பச்சைத் தேங்காயை காலையில் வெறும் வயிற்றில் இரண்டு கீற்றுக்கள் தினமும் தொடர்ந்து மென்று சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் வாய்ப்புண் ஆறும். தேங்காயை பால் எடுத்து அத்துடன் தேன் கலந்து தினமும் ஒரு டம்ப்ளர் அருந்தி வந்தால் மிகச் சிறந்த பலன்களைப் பெறலாம்.

2. கொய்யா இலை

கொய்யா இலைகளை வாய் முழுவதும் படும்படியாக நன்கு மென்று விட்டு துப்பி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர வாய்ப்புண்ணை ஆறும். கொய்யா இலை இரண்டை நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல தயாரித்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

3. தேன்

தேனில் உள்ள புண்ணை ஆற்றக்கூடிய ஆன்டி செப்டிக் குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும். வாயில் புண் உள்ள இடங்களில் விரலால் தேனை எடுத்து தடவி விடவும். இதனால் நிச்சயம் குணம் தெரியும்.

4. வாழைப் பூ

வாழைப் பூவை பாசிப் பருப்புடன் சேர்த்து கூட்டாக சாப்பிட்டாலும் வாழைப் பூவை உரிக்கும் போது இறுதியில் எஞ்சும் சிறிய மொட்டை பச்சையாகவோ அல்லது மோரில் கலந்து சாப்பிட்டு விட்டாலும் உடனடியாக வாய்ப்புண் குணமாகும்.

5. மணத்தக்காளிக் கீரை

மணத்தக்காளிக் கீரையானது வயிற்றுப் புண்ணோடு அதன் விளைவாக வரும் வாய்ப்புண்ணையும் ஆற்றுகிறது. 

மணத்தக்காளி கீரையை பாசிப் பருப்பு சேர்த்து கூட்டாக செய்தோ அல்லது சூப்பாகவோ தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நாட்பட்ட வாய்ப்புண்ணும் வயிற்றில் அல்சரும் இருந்த இடம் தெரியாமல் மொத்தமாக குணமாகிவிடும். 

மணத்தக்காளி கீரைச் செடியில் சிறிய தக்காளி வடிவமுடைய சிறுசிறு பழங்கள் காய்க்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடைய இந்தப் பழங்களை பச்சையாக மென்று தின்றால் வாய்ப்புண்ணுக்கு அருமருந்தாக வேலை செய்யும்.

6. சுண்டைக்காய்

சுண்டைக்காயின் மருத்துவப் பலன்களில் மிக முக்கியமானது அதன் வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை அகற்றும் தன்மையாகும். சுண்டைக்காயை பசும்நெய்யில் வறுத்து கையால் நொறுக்கி சுடு சாதத்தில் பிசைந்து மதிய உணவில் முதல் மூன்று கவளம் சாப்பிட பலன் கிடைக்கும்.

7. துளசி இலை

துளசி இலையுடன் ஒரு ஏலக்காயை சேர்த்து வாய் முழுவதும் படும்படி மென்று தின்று வந்தால் இதன் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும்.

8. புதினா, கொத்தமல்லி டீ

சூடான நீரில் சில கொத்து கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து டீ போல தயாரித்து அத்துடன் எலுமிச்சை சாறு ஒரு கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து டீயாக பருகினாலும் அந்த டீயிலேயே வாய்க் கொப்பளித்தாலும் வாய்ப்புண்ணும் ஆறும். 

9. வெங்காயம்

வெங்காயத்திற்கு வயிற்றுப் புண்ணையும் வாய்ப்புண்ணையும் ஆற்றும் ஆற்றல் உண்டு. வெள்ளை வெங்காயம் இன்னும் அதிகப் பலன்களைத் தரும். வெள்ளை வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி மிளகுத்தூள் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். இது அற்புத பலன்களைத் தரவல்லது.

10. கடுக்காய் பொடி

கடுக்காய்ப் பொடி நாட்டு மருந்து கடையில் அதை தினம் காலை மாலை சூடு பொறுக்கும் வெந்நீரில் கலந்து வாயில் வைத்துக் கொள்ளவும் 10 நிமிடம் கழித்து மெதுவாக அந்த நீரை முழுங்கிவிடவும். 
பின் சிறிது பொடியை புண் மேல் வைத்துக் கொள்ளவும். அது அப்படியே எச்சியுடன் கரைந்துவிடும். இதே முறையில் திரிபலா சூரணத்தையும் பண்ணலாம்.

ஏதாவது ஒரு மருத்துவ முறையை பின்பற்றவும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url