4 ஆண்களை காதலித்து திருமணம் செய்த பெண் ஓட்டம்:
வசதியான ஆண்களாக பார்த்து குறிவைத்து அடுத்தடுத்து 4 ஆண்களை காதலித்து திருமணம் செய்த பெண் ஓட்டம்:
நகை, பணத்துடன் மாயமானதால் போலீஸ் தவிப்பு
பெங்களூரு:
கர்நாடகாவில் வசதியானவர்களை குறிவைத்து, காதல் வலை வீசி திருமணம் செய்து கொண்டு பணம், நகைகளுடன் ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே மூன்று கணவர்களை விட்டுச் சென்ற நிலையில், தற்போது நான்காவது கணவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம், மத்தூர் அடுத்த கெஸ்தூரு கிராமத்தைச் சேர்ந்த புட்டசாமியின் மகள் வைஷ்ணவி என்பவர், மல்லனாயக்கனகட்டே கிராமத்தைச் சேர்ந்த சஷிகாந்த் ஆகியோர் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்தனர்.
தான் மிகவும் ஏழ்மையான பெண் என்று புலம்பிய வைஷ்ணவி, திருமணத்திற்கு முன்பே ரூ.1 லட்சம் வாங்கினார். பின்னர் திருமணத்திற்கு நகைகள் வாங்க வேண்டும் என்று கூறி அவரிடமே இருந்து 100 கிராம் தங்கத்தை வாங்கிக் கொண்டார். அவரும் தனது வருங்கால மனைவிக்கு ரூ.6 லட்சம் பணத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தினார்.
மேலும் தனது வருங்கால மாமனாருக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்தார். வீட்டு முன்பணத்திற்காக ரூ.50 ஆயிரம், மாமியாருக்கு பழைய செயினை கொடுத்துவிட்டு 46 கிராம் எடையில் புதிய செயின் வாங்கிக் கொடுத்தார். மேலும், பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் மற்றும் அனைவருக்கும் ஸ்மார்ட் போன்கள் வாங்கிக் கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி சஷிகாந்த் – வைஷ்ணவி ஜோடிக்கு ஆதிசுஞ்சனகிரி க்ஷேத்திரத்தில் திருமணம் நடைபெற்றது. மறுநாள், புதுமணத் தம்பதியினர் காரில் கவுடகெரே சாமுண்டேஸ்வரி கோயிலுக்கு புறப்பட்டனர்.
உம்மடிஹள்ளி கேட் அருகே தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சஷிகாந்த் காரை விட்டு இறங்கினார். ஏற்கனவே திட்டமிட்டபடி பின்னால் வந்த காரில் வைஷ்ணவி ஏறி தப்பி ஓடிவிட்டார்.
தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பார்த்தபோது, தனது புது மனைவி வைஷ்ணவி மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் சஷிகாந்த் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் தீவிர விசாரணையில், வைஷ்ணவிக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்திருப்பது தெரியவந்தது.
அந்த பெண்ணின் முன்னாள் கணவர்கள் தர்மஸ்தலாவைச் சேர்ந்த ரகு என்றும், அவருக்கு பின்னர் ஷிவா என்றும், அவருக்கு பின்னால் மற்றொருவருடன் திருமணம் செய்து கொண்டு வைஷ்ணவி வாழ்ந்ததாக தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வைஷ்ணவி குறித்து விசாரித்த போது அவர், வசதியான ஆண்களை குறிவைத்து காதலிப்பார்.
பின்னர் அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவிப்பார். அவர்களிடம் இருந்து பணம், நகைகளை வாங்கிக் கொள்வார். அவர்களுடன் பல இடங்களுக்கு ஜாலியாக சுத்துவார். திருமணம் செய்த பின்னர், திருமணமான முதல் நாளே நகைகள், பணத்துடன் தப்பியோடிவிடுவார்.
இந்த பெண்ணுக்கு பின்னால் வேறொரு கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று கணவர்கள் அளித்த புகாரின்படியும், நான்காவதாக திருமணம் செய்து கொண்ட சஷிகாந்த் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் அந்தப் பெண் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகிறோம்’ என்று கூறினர்.